நதிக்கரையோரம்





சில ஆண்டுகளுக்கு பின் காவிரி ஆற்றில் வெள்ளம் வந்திருக்கிறது. இவ்வருடம் பெய்த பருவ மழையின் கிருபையால் எந்த விதமான ஆர்பாட்டமும் போராட்டமும், தற்கொலையும், இல்லாமல் காவிரி அன்னை நெஞ்சம் நிறைந்து   முலைகனிந்து தன் பிள்ளைகளுக்கு அமூதூட்டியிருக்கிறாள் காவிரி   தென்னகத்தின் கங்கை, கங்கைச் சமவெளி நாகரீகத்திற்கு ஒப்பீடானது காவிரி சமவெளி நாகரீகம். குடகிலிருந்து பூம்பூகார் வரை விரிந்து கிடக்கும் காவிரியின் ஆற்றூப்படுகை தான் தென்னிந்தியாவின்  கலை,இலக்கியம், பண்பாடும் உருவாக காரணமான இடம் ஆகவே காவிரிக்கரையின்    அழகை காண ஒரு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தோம்


 நண்பர் பாரியிடம் சொன்னபோது போலாமே என்றார். உடனடி திட்டம் நிறைவேற்றப்பட்டது. முதற்கட்டமாக  ஈரோட்டிலிருந்து ஒகனேக்கல் வரை பின் திரும்பி  திருச்சி முக்கொம்பு  வரை காவிரி கரையோரமாக போவது என்று முடிவு செய்தோம். நாகையிலிருந்து ஈரோடு கிளம்பினேன்.  ஈரோடு ரயில் நிலையத்தின் இறங்கியதும் .அன்று காலைதான் கம்போடியா பயணம் சென்று வந்த கிருஸ்ணனுடன் பாரியும் நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். விஸ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில்  ஜெயமோகனுடன் எல்லா பயணங்களிலும் உடனிருப்பவர் கிருஸ்ணன். கம்போடியாவில் உள்ள நிலங்கள் மக்கள் உணவுபழக்கவழக்கங்கள், அரசு உள்கட்டமைப்பு, புராதமான இடங்கள் என கிருஸ்ணன் சொன்ன செய்திகள் அங்கிருந்த எல்லோருக்கும் கம்போடியா போகவேண்டிய ஆசையை ஏற்படுத்திவிட்டது.

இரவு  பாரியின் வீட்டில் தங்கினேன் இரவு   சுவையான சப்பாத்தி சாப்பிட்டபின் நல்ல தூக்கம். காலையில் ஆறு மணிக்கே எழுந்து விட்டோம் நேராக கூடுதுறை, காவிரியும் பாவானியும்  கூடும் (கலக்கும்) இடமாதலால் இப்பெயர் பெற்றது. இரு கரைகளைத்தொட்டு காவிரியும் பாவானியும் தழுவிக்கொள்வது கண்கொள்ளா காட்ட்சிதான்! அதன் முகப்பில் இருந்த  ஆலயத்திற்கு சென்றோம் ஞாயிற்றுக் கிழமையாதலால் குளிக்க முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோதியது.

மெல்ல அக்கோயில் சிற்பங்களை பார்த்தோம் கோயில் யானை ஒன்று பவ்யமாக தென்னை ஓலையை பிய்த்து அலைந்து அலைந்து சிறுபிள்ளை தட்டில் சோற்றுப்பருக்கையை சிந்தி, அள்ளி,பிசைந்து சாப்பிடுவதுபோல் தென்னை ஓலையை சாப்பிட்டுக்கொண்டிருந்தது


 பாவானி காவிரியோடு கூடுவதைப் பார்த்து விட்டு மெல்ல வண்டியை கிளப்பினோம்  சாலையின் இறுபுறமும் சிறு சிறு கிராமங்கள். ஒரு கிராமத்திற்கு செல்லும் சாலையில் பைக்கை உள்ளே விட்டோம்.  நேராக அது காவிரி கரையை ஒட்டிய சாலைக்கு கொண்டு சேர்த்தது காவிரிகரையின் இருபுறமும் வீடுகள். கரையின் ஓரமாக சுற்றிலும் கரும்பு, வாழைத்தோட்டங்கள். அருகில் இருந்த முனியசாமி கோவில் ஒன்றின் படித்துரையில் இறங்கி குளித்தோம்.  காவிரியில் முதல் முதல் குளியல் தண்ணீர் ஜில்லென்றிருந்தது. அருகிலிருந்த மதகிலிருந்து தண்ணீர் திறந்து விடும் ஓசை ஹே… என்றவாறிருந்தது. பாய்ந்தோடும் நீரிலும் ஒருவர்  பரிசல்  விட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

அங்கிருந்து நேராக ஒகனேக்கல் செல்வதாக திட்டம் வழியில் இருந்த ஒரு கிராமத்து கடையில் காலை உணவாக பருப்பு வடை சாப்பிட்டோம் . இரண்டு ரூபாய்க்கு ஒரு வடை இதற்கு முன் இவ்வளவு குறைந்த விலையில் பருப்பு வடை சாப்பிட்டதில்லை. நாங்கள் சாப்பிட்ட கடைக்கு எதிரில் இருந்த கடையிலும் வடை போட்டுக்கொண்டிருந்தார்கள்

அது என்ன வடை?
என்று கேட்டதற்கு அதும் பருப்பு வடை தான் என்றாள்  எங்களுக்கு வடை விற்ற கிழவி ஆனால் அருகில் சென்ற பின்பு தான் தெரிந்தது.அது உழுந்தவடையென்று வயிறு நிறைந்திருந்ததால் அதற்குமேல் உழுந்தவடை சாப்பிட முடியவில்லை. பாட்டிக்கள் வடை விசயத்தில் மட்டும் ஏன் எப்போதும் இப்படி இருக்கிறார்கள்?

 வழியில் கரை ஓரமாக நட்டிருந்த கரும்பு ஒடித்து தின்றோம்.கரும்பு பறிக்க இறங்கியதும் பாரியிடம் பைக்கை ஸ்டார்ட் செய்து தயாராக வைக்கச்சொன்னேன். கரும்பை ஒடித்ததும் விருட்டென பைக்கை கிளப்பச் சொன்னேன். ஏதோ செயினை பறிப்பு செய்வதைப்போல

ஓரிடத்தில் இறங்கி ஆற்றைபார்த்துவிட்டு அருகில் இருந்த ஒரு வீட்டிற்கு முன்வாசல் அடைத்திருந்ததால் பின் வாசல் வழியாக சென்று குடிக்க தண்ணீர் கேட்டோம் தீடிரென்று கையில் திருடிய கரும்புடன் தண்ணீ கேட்டு வந்து நிற்கும் எங்களை பார்ப்பதற்கு எப்படி இருந்ததோ. தெரியவில்லை!

எங்களுக்கே குடிக்க தண்ணி இல்ல

தவிச்ச வாய்க்கு தண்ணீ தாராதா தமிழகமே

பொங்கி எழலாம் என்றூ தோன்றியது.  ஏறியா சரியில்லை அடக்கி வாசிக்கவேண்டும் என நினைத்துக் கொண்டு!

பின்னாடி தான் காவிரி தண்ணி ஓடுது தண்ணீ இல்லைன்றீங்க என்றேன்

அப்ப அங்கயே போய் குடிச்சுக்க வேண்டியது தான… என்று பதில் வந்தது.

இனி அங்கு நின்றால் சரிப்படாது

காவிரையை பார்த்துக்கொன்டே வண்டியை கிளப்பினோம். கொளத்தூர் தாண்டி சென்றபோது மெல்ல மேட்டூர் நோக்கி கிளம்பினோம். மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் முடியாட்சியில் கட்டப்பட்டிருந்தது. மேட்டுர் அணையின் கட்டுமானம் குறித்த புகைப்படங்களை பார்ப்பதற்கு நெகிழ்வாக இருந்தது. அக்கருப்பு வெள்ளை புகைப்படத்தில் தலையில் சுமையோடு சிறு சிறு உருவங்களாக நடந்து செல்லும் மனித உயிர்கள். மானுட உழைப்பின் அருமையை இது போன்ற இடங்களில்  தான் உணரமுடிகிறது. அங்கு கட்டப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி பார்த்தோம் . இரு மலைகளுக்கிடையில் விரிந்து கிடக்கும் கடலாய் கிடந்தது காவிரி. 

மேட்டூர் அணை சுற்றாலதளமாகியிருக்கிறது நீர் நிறைந்திருக்கும்போது அணையைப் பார்ப்பது என்பது பூப்பேய்திய புதுப்பெண்ணைப் பார்ப்பதுபோலல்லவா!, என்ன ஒரு குறை  சில குறிப்பிட்ட பகுதிக்கு உயரதிகாரிகாள் அல்லது அவர்களின் தயவு இருந்தால் மட்டும் தான் அனுமதி.  மதகுகளில் வெளியேறிக்கொண்டிருந்த நீர் பாய்ந்தோடியது,  உபரி நீர் வெளியேரிய கால்வாயில் சிலர் குளித்துக் கொண்டிருந்தார்கள் நானும் குளிக்க சட்டையை கழட்டப் போனவன் இடம் ,ஏவல், பொருள் கருதி ஆசையை அடக்கிக் கொண்டேன்.

மேட்டுரிலிருந்து நேராக ஒகனேக்கல் செல்லும் சாலையில் வழியில் ஒரு கிரமத்தில் நின்றோம். வீட்டின் வாசல் வரை மேட்டூர் அணை தண்ணீர் வந்திருந்தது.

 வீட்டுக்காரரிடம் சென்று ஐயா உள்ள போய் கொஞ்சம் பாத்துக்கறோம் என்றேன்

பாத்துக்கங்க யார் வேணாம்னா ? என்றார் அபரிமிதமான சலிப்புடன்

அருகில் சென்றவுடன்தான் அவருடய சலிப்புக்கு காரணம் தெரிந்தது

நீர்பிடிப்பு பகுதியில் எல்லாம் விவசாயம் செய்திருக்கிறார்கள், பகுதி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தது.
 தண்ணீர் அதிகமாதலால் மீன் பிடிக்கவும் போவது குறைவு என்றார்கள். நிலத்தில் பாயும் நீர் எல்லோருக்கும்   மகிழ்ச்சியை தராது போலிருக்கிறது.

கர்நாடகா எல்லை ஆரம்பித்ததும் கூடவே காடும் ஆரம்பித்தது, மந்திகள், மரத்தில் துள்ளிகொண்டும் சாலையில் போகும் வண்டிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டுமிருந்தன ,உண்மையில் மந்தியை நாம் வேடிக்கை பர்க்கிறோமோ அல்லது அவை நம்மை வேடிக்கை பார்க்கிறதா?

 அடர்காட்டுக்குள் இருந்து சாலையில் வந்தமர்ந்திருக்கிற சிங்கவால் குரங்குகளை நான் பார்த்து வாய்பிளந்த போது. இதுவென்ன ஆச்சரியம் இதுதான் எல்லா இடத்திலும் பாரி  இருக்குமே என்றார். பாரி
 ஓ…. என்றபடி உற்சாகத்தைக் குறைத்துக் கொண்டு  காவிரியும் பாலாறும் கலக்குமிடத்திற்குச் சென்றோம். இவ்விடம் கர்னாடக வனப்பகுதிக்குள் இருக்கிறது, சிறிய சிறிய குடிசைகள்,அருகே நான்கைந்து பரிசல்கள், அவ்விடத்தில் நீரோட்டம் அதிகம் இல்லை தண்ணீர் காற்றின் அலைவுகளுக்கேற்ப அலையாடிக்கொண்டிருந்தது. சுற்றிலும் எந்த ஊரும், கோயிலும் இல்லாமலிருந்ததால் நீர் சுத்தமாக இருந்தது. அங்கிருப்பவர்களிடம் பேசிக்கொண்டிருந்தோம்,

குடிசையின் கூரையாக ஒரு நைந்து போன பரிசல் சுற்றிலும் தட்டி, ஒரு வயர்கட்டில், மண் அடுப்பு, சில சில்வர் பாத்திரம் சமையல் பொருட்கள்.ஒரு வயர் கட்டில் இவ்வளவுதான் அவர்களுடைய பொருட்கள்.இதைவைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த அவர்களால் முடிகிறது. எளிமையான வாழ்க்கை வனக்காவலர்களின் தொல்லை இருப்பதாகவும் , மீன் பிடிக்க அனுமதித்தாலும் சிலபேர் ஆடுமாடுகள் மேய்ப்பதாலும், வேட்டையாடுவதாலும் தங்களுக்கும் தொல்லை ஏற்ப்படுவதாகச் சொன்னார்கள்.


ஒகனேக்கல் செல்லும்பாதைக்கு மெயின் ரோட்டிலிருந்து இரண்டி கிலோ மீட்டர் உள்ளே சென்றதும் ஒரு சோதனைச் சாவடி இருக்கிறது. அவர்கள் செய்யும் வேலை என்பது ஒகனேக்கலுக்கு வரும் பயணிகளை திரும்ப அனுப்புவது மட்டும் தான். ஒகனேக்கலில் அதிகமான வெள்ளப்பெருக்கு காரணமாக யாரையும் அனுமதிக்கவில்லை என்றார்கள். ஆனால் அதிகாரிகள் அவர்களுக்கு தெரிந்தவர்கள் வந்தார்கள் என்றால் கையெழுத்திட்டுவிட்டு உள்ளே போகலாம், அங்கிருந்து நேராக கர்னாடகா நோக்கி போனோம்

. மாதேஸ்வரன் மலையிலிருக்கும் மாதேஸ்வரன் கோயில் ,கர்நாடகத்தின் வீரசைவர்களின் மிக முக்கியமான கோயில், ஒரு இந்து கோயிலைப் போல் தான் இருந்தது. ஒரு சிறு குன்றின் மேல் இருந்த பெரிய கோயில். இக்கோயிலைச் சுற்றிதான் அவ்வூர் இருக்கிறது .சோளகர் தொட்டி நாவலில் இக்கோயில் வரும். நீண்டவரந்தாவின் ஓரிடத்தில் சென்று அமர்ந்தவர்கள் உடல் அசதியால் அப்படியே உறங்கிவிட்டோம். பின் எழுந்து கோயிலை ஒருமுறைசுற்றிப்பார்த்துவிட்டு  மாலை ஒரு நான்கு மணி போல் மாதேஸ்வரன் மலையிலிருந்து கீழிறங்கினோம்.

 வரும்போது மலைப்பாதையில் இறக்கத்தில் வண்டி எஞ்சினை முழுவதுமாக அணைத்துவிட்டேன் வெறும் சக்கரங்கள் மட்டும் உருண்டன, மவண்டியின் இறைச்சலில்லாமல் பயணித்தோம் மற்ற வண்டிகள்  போகும் அதே வேகத்தில். சிறு வயதில் மலைகளில் பயணிக்கும்போதெல்லாம் அதன் இறக்கப்பாதையில் சைக்கிளில் போகவேண்டும் என்பது என் ஆசை அனால் சைக்கிளை இறக்கத்தில் மட்டுமே மிதிக்க முடியும் ஏற்றத்தில் முடியாது. பெரும்பாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது அப்பாதைகளில் சைக்கிளில் பயணிப்பதாக மனோராஜ்யம் செய்ததுண்டு. ஒரு வகையில்  பைக்கில் பயணித்தாலும் சைக்கிள் கனவு கொஞ்சம் ஈடேறிவிட்டது.

மாதேஸ்வரன் மலையிலிருந்து கீழிறங்கி மறுபடியும் ஒகனேக்கல் செல்லும் பாதைக்குச் சென்றோம். என்ன கெஞ்சியும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அப்படி ஒகனேக்கல் போகவேண்டும் என்ற என் ஆசை ஆற்றூ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது….

 அங்கிருந்து நேராக மேட்டூர். மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்ட வாய்க்காலில் உள்ளே தவ்வி குளித்துக் கொண்டிருந்தார்கள். நானும் ஆடைகளை களைந்துவிட்டு வெள்ளத்தில் தவ்வினேன் அன்று  ஞாயிற்று கிழமையாதலால் அந்த இடமே திருவிழாக்கோலம் கொண்டிருந்தது. அதற்கே உண்டான அசுத்தங்களுடன்.

நேராக  கூடுதுறை காலை கிளம்பிய இடத்திற்கே வந்து சேர்ந்தோம். காவிரியும்,பாவனியும் கூடும் இடதில் இருந்த ஊர். வந்ததும் அறைதேடும் படலம் துவங்கியது. ஒருவழியாக முன்னூற்றம்பது ரூபாய்க்கு இருவர் தங்கிக் கொள்வது போல ஒரு அறை. பாரி தங்கியதிலே இதுதான் குறைந்த வாடகை கொண்ட அறை என்றார். அறையின் கண்ணாடியின் வழியாக காவிரியைப் பார்த்தேன். கரையைச் சுற்றி ஊணப்பட்டிருந்த மஞ்சள் விளக்குகளின் வெளிச்சம் தங்கமீன்களைப்போல் நீரில்  விளையாடிக்கொண்டிருந்தது.. படித்துறையின் வழியாக பார்த்த போது நான் பார்க்கும் உலகின் மற்றொரு தோற்றத்தை நீரில் பார்க்கமுடிந்தது.  நீருக்குள் இருந்து பார்க்கும் போது ஏன் எல்லாம் அழகாயிருக்கிறது. ஒரு வேளை நீரின் அழகுதானோ அவற்றையும் அழகுபடுத்துகிறது.


உணவருந்துவதற்காக ஒரு கடைதேடி முடிவில் மனதிற்கு பிடித்த கடைஇல்லாததால் கிடைத்த கடையில் சாப்பிட முடிவு செய்தோம். இருவருக்கும் உணவின் மீது பெரிய நாட்டமில்லாதலால் ஹோட்டல் கண்டு பிடிப்பது எளிதாகவே இருந்தது. ஹோட்டலுக்குச் சென்ற போது அந்த ஹோட்டல் மட்டுமல்ல அவ்விடமே பரபரப்பாக இருந்தது.

கொத்து புரோட்ட இருக்கா இருக்கு அதெல்லாம் இப்பபோடமுடியாது தோச அதெல்லாம் இப்ப முடியாது வேற என்ன இருக்கு புரொட்டா தான் என்றார் எனக்கு சப்பென்று போய்விட்டது. புரோட்ட தமிழகத்தின் பொதுஉணவாகிவிட்டதா?

சாப்பிடுக்கொண்டிருக்கும் போதே சட்டரை இழுத்து மூடினார்கள். ஆம்லெட் போட்டுக்கொடுத்த புரொட்டா மாஸ்டரும் கல்லாவில் உட்கார்ந்திருந்தவர்களும் தங்களது செல்போனை துலாவும் வேகத்திலிருந்தே விசயம் விளங்கிவிட்டது. கலைஞர் உடல் நிலை மோசமடைந்திகிறது இன்னும் சில நிமிடங்களில் அறிவிப்பு வரலாம். எந்த ஒரு பத்திரிக்கையோ ,முறையான அறிவிப்பு வெளியிடாத நிலையில் பேஸ்புக் வாட்சப் தகவல்களை எப்படி கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் என்பதை இந்நிகழ்வில் கண்கூட கண்டேன். (கலைஞர் இவ்வதந்திக்கு பின்பு பத்து நாள் கழித்துதான் மரணமடைந்திருக்கிறார்)

 ஹோட்டலுக்கு வெளியே வந்தோம் எங்களுக்கு அடுத்திருந்த சாலையில் இருந்து இரண்டு வெள்ளைச்சட்டை போட்டபெரியவர்கள் அவர்களுக்கு பின்னே ஐந்தாறு பள்ளீக்கூடம் படிக்கும் சிறுவர்கள் விருவிருவென நடந்து மெயின்ரோட்டிற்கு வந்தார்கள்

யேய் டேய் கடய அடடா அடடாங்க்றேன். பின்னால் வந்த சிறுவர்களின் கத்தல் பெரியவர்களைவிட பலமாயிருந்தது. வழியில் வந்த இரண்டு பஸ்ஸை மறித்து ஏதோ சொல்லி சொல்லி அனுப்பிக்கொண்டிருந்தார்கள் இதற்கு மேல் இருந்தால் சரிப்படாது என அறை நோக்கி விறைந்தோம்

மறுநாள் காலையெழுந்து பல்மட்டும் விளக்கிவிட்டு அறையை காலி செய்யபோனபோது ரிசப்சனில் கேட்டேன்  கலைஞருக்கு என்ன ஆச்சு? அவர் ஒன்றுமில்லை அவர் உடல்நலமால இருப்பதாகச் சொன்னார். ராத்திரி புரோட்டாவைப்போல இதுவும் சப்பென்று போயிற்று. மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையிலே உழல்வதால் அவர்களுக்கு அவ்வாழ்க்கை சலிக்கிறதோ! அவ்வப்பொது வரும் இது போன்ற சில வதந்திகள் அவர்களின் அன்றாடத்திலிருந்து விலக்கி அவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் சுவரசியம் அளிக்கிறதா?

 ஒரு டீ குடித்துவிட்டு நேராக பாவனியிலிருந்து திருச்சி சாலையில் ஏறினோம் எங்கள் முன்னுக்கு பின் இறுபுறமும் காவிரி காவிரி தொடர்ந்து கொண்டே இருந்தது.. மெயின் ரோட்டிலிருந்து ஆற்றங்கரைக்குச் செல்லும் பாதையிருந்தால் உள்ளே செல்லுவோம் அவ்வழியிலிருந்து காவிரியை கண்டு கொண்டு பயணித்தல், பின் மீண்டும் மெயின்ரோடு பின் மீண்டும் காவிரிக்கரை.

ஓரிடத்தில் பெருக்கெடுத்தோடும் காவிரியில் பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள் பெரிய மதகிலிருந்து திறந்த நீர் கரையின் இருபுறமும் சுழித்தோடிக்கொண்டிருந்தது. மீன் ஒன்றை உரசிக்கொண்டிருந்தார்கள் அம்மீனைப் பார்த்ததும் மீன் சாப்பிடத்தோன்றியது.  முன்னூறூ ரூபாயில் இருவரும் இட்லி தோசையோடு திருப்திகரமாக மீன் சாப்பிட்டோம் வாழ்நாளில் இதற்குகு முன் நான் அவ்வளவு மீன் சாப்பிட்டதில்லை. இட்லியும் தோசைக்குமான மீன்குழம்பை இப்போதும் நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது, மீன் நான் விரும்ம்பி சாப்பிட மாட்டேன் அதற்கு காரணம் மீன் வாடை சுத்தமாக ஆகாது ஆனால் இம்மீன் வாடையே இல்லை இதுபோன்ற மீனை அக்கவிடம் வாங்கி சமைத்துதரச் சொல்லலாம் தான் ஆனால் அவளின் தோசைக்கரண்டி கொஞ்சம் பெரியது….

பின் கரையோரமாகவே வந்து தொல்லியல் கோவில் ஒன்றைப் பார்த்தோம் சுற்றிலும் குடியிருப்புகளுக்கு நடுவில் ஒரு சிறிய அளவிலான கோயில் அக்கோயில் எனக்கு தாரசுரம் கோயிலின் ஒருபகுதியைத் தான் ஞாபபடுத்தியது. பின் நேராக திருச்சி குக்கொம்பு காவிரி நதி கொள்ளிடம் ஆறாகவும் காவிரி ஆறாகவும் பிரியும் இடம் முக்கொம்பு முன்னர் ஒரு சிறு இடமாக இருந்திருக்க வேண்டும் இன்று பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள சுற்றுலாத்தளம். பாலம் கடந்து முக்கொம்பில் சென்று அமர்ந்தபோது சுற்றிலும் நீராய் ஏதோ தீவில் இருப்பது போல் இருந்தது. அங்கிருந்த மணலில் இருவரும் சிறிது நேரம் படுத்துறங்கினோம். நதிகள்  கூடும் பிரியும் இடம் எல்லாமே ஏதோ முக்கியமான இடமாக இருக்கிறது. அதிகமாக வழிபாட்டிடங்களாக. நாங்கள் பார்த்த சிற்றூர்களில் நிறைய இடங்களில் ஆற்றின் கரையோரத்தில் தான் கோயில்கள் உள்ளன அதிகமாக முனியப்பன்சாமி கோவில்!! உடல் அசதி இருவரையும் அசத்தியது எனவே முக்கொம்போடு பயணத்தை முடித்துக் கொள்ளலாம் எனத்திட்டமிட்டு பாரி என்னை பேருந்தில் திருச்சிக்கு ஏற்றிவிடு ஈரோட்டுக்கு கிளம்பினார். பேருந்தில் வரும்போது சாலையின் ஓரமாக வாய்க்காலில் காவிரி என் பின் தொடர்ந்து  வந்துகொண்டே இருந்தது. எத்தனை ஆண்டுகாலம் இவ்வாய்க்காலில் இந்நீர் ஒடிக்கொண்டிருக்கவேண்டும்!! ஓடிக்கொண்டிருப்பதால் நதி தூய்மையானது அதை தேடிப்போனதால் நானும்  என்னை கொஞ்சம் தூய்மைப்படுத்திக் கொண்டேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்வு (சிறுகதை)

அஞ்சலை நாவல் ஒரு பதிவு

கோட்டையை திறப்பதற்கான சாவி- வாசிப்பது எப்படி நூல் வாசிப்பனுபவம்