கோட்டையை திறப்பதற்கான சாவி- வாசிப்பது எப்படி நூல் வாசிப்பனுபவம்
வாசிப்பு குறைந்து விட்டது எனச் சொல்லிக் கொண்டிருக்கும் பெரும்பாலனவர்களுக்கு மத்தியில் ஜெயமோகன் ஒரு பேட்டியில் சொன்னார். முன்பைவிட இன்று வாசிப்பு அதிகமாகியிருக்கிறது.... முதலில் கேட்க அதிர்ச்சியாக இருந்தாலும் அதற்கு அவர் முன் வைத்த சான்றுகளை ஆராய்ந்தபோதும் சுற்றியிருப்பவர்களை சற்று கூர்ந்து அவதானித்தபோதும் அக்கூற்று சரிதான் என்றே சொல்லத்தோன்றியது.
இணையம், சமுகவலைதளங்கள் நமது விருப்பங்களுக்கு ஏற்ப செய்திகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. சாதரண செய்தி கூட பலவகையில் திரித்து படிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டு நம்மை வந்தடைந்து கொண்டிருக்கிறது. இதனை திட்டமிட்டு பல்வேறு நோக்கங்களுக்காக உருவாக்குகிறார்கள். இவற்றைத் தவிர்த்து நல்ல நூல்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது நமது தேடலை வளர்த்துக் கொள்வது என்பது இன்றைக்கு நம் முன் இருக்கும் சவால். ஒன்றை தெரிந்து கொள்ளாமல் இருப்பதைவிட தவறாக தெரிந்து கொள்ளும் ஆபத்து இன்று அதிகமாக இருக்கிறது.
பொதுவாக அறிவியல் மற்றும் தத்துவ நூல்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஒன்று தெரியும் . அங்கு இரண்டுவிதமான பகுதிகள் செயல்படுகின்றன. ஒன்று அத்துறையின் நிபுணத்துவம் பெறுவதற்காக துறை சார்ந்த அறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வது அதில் ஆரய்ச்சியில் ஈடுபடுவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போது மறுபுறம் பொதுமக்களுக்கு அத்துறை சார்ந்த அறிவை தொகுத்துக் கொடுக்க முயல்வது எளிமைப்படுத்தி விளக்குவது போன்றவைறையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள். பெர்னன்ட் ரஸ்ஸல் போன்ற தத்துவவாதிகளும் , ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் அறிஞர்களும் . முதல் பகுதிக்கு அளித்த பங்களிப்பைப் போன்றே இரண்டாம் பகுதிக்கும் அப்பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எல்லாத்துறைகளைப் பற்றியும் துறை சார்ந்த அறிஞர்களால் சுருக்கமான அறிமுகம். என்ற நூல்வகை எழுதப்பட்டுள்ளது. சித்திரப் படங்கள். வரைபடங்கள் மூலம் விளக்கும் Graphic guide போன்ற நூல்கள் எல்லா துறைசார்ந்தும் கிடைக்கிறது.
தமிழில் நவீன இலக்கியம் வாசிக்க, புத்தகங்கள் வாசிப்புதற்கான வாசிப்பு பயிற்சியை அளிப்பதற்கான நூல்கள் அரிதாகவே எழுதப்படுகின்றன. புத்தக வாசகனாக இலக்கியம் வாசிக்கத் துவங்குகையில் சரியான வழிகாட்டி நூல்களை வாசிப்பது மிக அவசியமானது.
நூலகத்தில் சேருவதற்காக அக்கா மகனிடம் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் வாங்கி வரச்சொன்னேன். கையொப்பம் வாங்கி வந்தவனிடம் தலைமை ஆசிரியர் கேட்ட கேள்வி ஒன்றைச் சொன்னான் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்து.
"நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்து படிக்க த்துவங்கினால் பள்ளிக்கூட புத்தகங்களை எப்படிப் படிப்பாய்? "
ஒரு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியரின் பதில் இது.
பெரும்பாலும் தமிழில் இலக்கியம் வாசிக்க வருபவர்கள் ஒரு தற்செயலாகத்தான் வாசிக்கத் துவங்குகிறார்கள். குடும்பம், பள்ளி, சமூகம் போன்றவற்றிடமிருந்து அரிதாகவே அதற்கான ஊக்கமும் பயிற்சியும்கிடைக்கிறது. ஜெயமோகனின் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், எஸ் ராமகிருஸ்ணனின் கதாவிலாசம் போன்ற நூல்களை வாசிக்க விட்டால் என்னால் இலக்கிய வாசகனாக மாறியிருக்க முடியுமா எனத் தெரியவில்லை. நூலக அடுக்குகளில் யாராலும் படிக்கப்படாமல் ஒரு மூலையில் கிடந்தது ஜெயமோகனின் நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூல் ஒரு புதையலைபோல ஒரு பெரும் உலகிற்கான வாசலைத் திறந்துவிட்ட நூல் அது. பின்னர் அவர் எழுதிய கண்ணீரைப் பின் தொடர்தல், இலக்கிய முன்னோடிகள் போன்ற நூல்கள் பல்வேறு எழுத்தாளர்களின் நூல்களை, இலக்கியப் போக்குகளை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. ஒரு மாபெரும் கோட்டையைத் திறப்பதற்கான சாவி! இது போன்ற நூல்கள்.
பொது மக்களுக்கும் துறைசார்ந்த நிபுணர்களுக்குமிடையே ஒரு விடுபடல் இருக்கிறது. துறை சார்ந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் துறைகளுக்குள்ளேயே தங்கள் தேடல் சார்ந்து இயங்குகிறார்கள். பொது மக்கள் பெரும்பாலும் அவர்களைப் தொடர்பு கொள்வதில்லை. ஒரு பெரும் செயல் நடக்கும் போதோ அல்லது சர்ச்சைகளின் போது மட்டும்தான் அவர்களை உலகம் கவனிக்கிறது. பொது மக்கள் துறைசார் நிபுணர்கள்இரு சாரரையும் இணைப்பதற்கான கோடு என்பது இன்றைய காலகட்டத்தின் தேவை. ஆகவே செல்வேந்திரன் எழுதிய இந்நூல் தமிழ் சமுகத்திற்கான சிறந்த கொடைகளில் ஒன்று. புத்தக வாசிப்பு பற்றிக் கேட்பவர்களிடம் இந்நூலைப் பரிந்துரைக்கிறேன். நூலை வாங்கி நண்பர்களுக்கு பரிசளிக்கிறேன்.
.
தமிழில் தீவிரமாக புத்தகங்கள் இலக்கிய நூல்கள் வாசிப்பவர்கள் பொருளியல் ரீதியாகவும் தங்கள் அன்றாட வாழ்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் தொய்வுறுகிறார்கள் தோல்வி அடைகிறார்கள் என்ற கூற்று உண்டு . செல்வேந்திரன் தன் சொந்த வாழ்கையனுபவங்களோடு அந்த கூற்றை இந்நூலில் மறுக்கிறார். புத்தக வாசிப்பு உருவாக்கித் தரும் கற்றல் இன்பம், மொழித்திறன், புதியவற்றைத் தேடிச் செல்வதற்கான விழைவு போன்றவற்றை இந்நூலில் அவர் முன்வைக்கிறார். இன்றைய காலகட்டத்தில் புத்தகவாசிப்பு தரும் உலகியல் பலன்கள், புத்தகங்கள் வாசிக்க இன்று பெருகியுள்ள நவீன தொழில் நுட்பசாதனங்களும் எழுத்தாளர்களின் அறிமுக உரைகளையும் அறிமுகப்படுத்துகிறார்.
நூலின் இறுதியில் தான் வாசித்த நூல்களின் நல்ல ஒரு வாசிப்பு பட்டியலையும் அளித்துள்ளார் இந்நூலை வாசிப்பவர்கள் அப்பட்டியலை தொடர்ந்து வாசித்தால் அவர்களுடைய ஆளுமை மேம்படக்கூடும்.தமிழில் இது போன்ற நூல்கள். நிறைய எழுதப்பட வேண்டுமென நினைக்கிறேன். புதிய வாசகர்கள் ஆளுமை மிக்க துறைசார் நிபுணர்கள் இதுபோன்ற நூல்களின் மூலம் உருவாகி வருவார்கள் என நம்புகிறேன்.
இந்நூல் ஒரு பெரும் கோட்டையை திறப்பதற்கான சாவி . எல்லோரும் அந்த சாவியைப் பயன்படுத்துவார்கள் எனச் சொல்ல முடியாது. சிலர் அச்சாவியை அலட்சியமாக தொலைத்து விடக்கூடும். சிலர் சற்று திறந்து பார்த்துவிட்டு விட்டு விடக்கூடும் அரிதாக யாரோ ஒருவன் கோட்டையை பூட்டியிருக்கும் பூட்டை தலையை வைத்து முட்டிப் பார்க்கக் கூடும். தலையைப் பிளந்து கூட பூட்டை உடைக்கும் நெஞ்சுரம் உள்ள ஒருவனுக்கு ஒரு பெரும் கருணையால் இச்சாவி கிடைக்காலாம்
பெரும்பாலும் இப்படி எழுதப்படும் நூல்கள் வெற்றி பெறுவதில்லை. பொது மக்களின் நிலை அவர்களுடைய பிரச்சனை அவர்களுடைய உளவியல் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து அதற்கேற்ற வண்ணம் தீர்வுகளை அளிப்பவர்களே வெற்றியை வசப்படுத்திக் கொள்கிறார்கள். செல்வேந்திரன் அந்த வெற்றியை ஏந்தியிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக