தீட்சையின் சில படி நிலைகள் குரு நித்யசைதன்ய யதி ( தமிழில் கதிரேசன் )

ஒரு மகாகுருவின் அருகில் ஒரு நல்ல சீடன் ஒருவன் வந்தடைவது தெய்வ கருணையால் எனக் கூறலாம். அதுபோல தங்களுக்கிடையே ஒத்துபோகமுடியாத குருவும் சீடனும் சந்திப்பதைத் தற்செயல் என்றுதான் சொல்லவேண்டும் .அப்படிப்பட்ட இருவர் தற்செயலாக சந்திக்கும் சந்திப்பு இருவருக்குமிடையே நேரம் வீணாவதற்கும் மனது புண்படுவதற்கு மட்டுமே வழிவகுக்கும். குருவும் சீடனும் தம்மில் ஒத்து போகிறவர்களா என்பதை அறிந்துகொள்ள ஒரு தவறு நடக்கமால் வேறு வழியில்லை .சிறிது காலம் குருவும் சீடனும் ஒன்றாக கூடிக்கழித்த காலங்களை திரும்பி பார்க்கும்போது மட்டும்தான் அவர்களுடைய சந்திப்பு நன்மைக்கா அல்லது தீமைக்கா என்று புரிந்து கொள்ள முடியும். நான் மிகச்சிறந்த குரு என கம்பீரமாக மார்தட்டிக் கொண்டு திரிபவர்களுக்கே ஆயிரக்கணக்கிள் சீடர்கள் தேவைப்படுகிறார்கள். இயேசு கிறிஸ்துவுக்கே பன்னிரண்டு சீடர்கள் கிடைத்து இறுதியில் ஒருவரும் உதவவில்லை. குரு சீட உறவில் ஏற்படும் தவறுகள் முரண்பாடுகளைக் களைந்து அவற்றை உபயோகரமாக மாற்றிக்கொண்டு செயல்படுவது அவ்வளவு எளிதல்ல. ஒரு பழுதடைந்த கடிகாரத்தை சரிசெய்ய வேண்டுமானால்கூட கடிகாரம் செய்பவன் அதனை சிறிது நேரம் இணைத்தும் பிரித்தும் பார்ப்பார். அதுபோல ஒரு குரு தன்னிடம் வருபவரை சோதித்துப் பார்ப்பதும் புரிந்து கொள்ள முயல்வதும் சகஜம்தான். கருணையுள்ள சில குருக்கள் தன்னிடம் வருபவரை அதீத அன்போடு வரவேற்று முதல் நாளே உபதேசங்கள் வழங்கி மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்வார். ஆனால் மகா குருக்கள் பலரும் சீடனை மகிழ்ச்சி படுத்தவோ கொஞ்சவோ முயர்ச்சிக்க மாட்டார்கள் பதிலாக தவறுகளை வெட்டி முறித்தது போல் சொல்வார்கள். கவனமில்லாமல் ஆர்வமில்லாமல் இருப்பவர்களை சென்றுவிடுமாறு கூறிவிடுவார்கள். அவர்கள் தங்கள் நேரத்தையோ ஆர்வத்தையோ வீணடிக்க விரும்ப மாட்டார்கள். பன்றிகளின் முன் முத்துக்களை எறிந்து கொடுக்கக்கூடாது என்பது அவர்களுடைய மனோபாவம். எப்படியானாலும் தேர்வுகள் பரிசோதனைகள் இல்லாமல் குரு சீட உறவு உருவாகாது. இதுதான் முதல் படிநிலை. பரிசோதனைகளும் தேர்வுகளும் முடிந்தபின் குருவும் சீடனும் ஒருவருக்கொருவர் பொருந்திப் போகிறவர்கள் என்றால் மெல்ல அவர்களுடைய இதயம் அன்பும் நம்பிக்கையும் கொண்டு சேர்ந்திணைகிறது . பின்னர் குறுகிய நாளிலேயே அவர்களுடைய உறவு ஆத்ம உறவாக மாறுகிறது. பின்னர் அவர்களுக்கிடையே ரகசியங்களை நம்பிக்கையின் பேரில் பரிமாறிக்கொள்ள முடிகிறது. இந்த உறவு போதுமான அளவு உறுதி பட்டு விட்டால் பின்னர் குருவுக்கும் சீடனுக்குமிடையே எந்த ரகசியங்களும் இல்லை என்ற நிலை உருவாகிறது. தூய்மையான காதலின் உறவு போலத்தான் இது என்றாலும் நம் அன்றாட வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்களைப் போலல்லாமல் மாறுபட்டது. இந்நிலையில் குருவோடு சீடனுக்கோ அல்லது சீடனோடு குருவுக்கோ பொறாமை உணர்வு உருவாக வாய்ப்புள்ளது! அப்படி உருவானால் அது அவ்விருவரின் மனம் மற்றும் உடல் விருப்பங்கள் வேறுபட்டிருக்கிறது எனப் பொருள். அன்னை தன் குழந்தைக்கு சரியான அளவு உணவைக் கவனித்துக் கொடுப்பது போல குருவும் சீடன் உட்கொள்ளும் அளவுக்கு அறிவை பகிர்ந்தளிக்கிறார். ஸ்தூலமானவற்றை அறிமுகப்படுத்தி விட்டு அங்கிருந்து காரணத்திற்கும் அதிலிருந்து சாதரணமானவற்றுக்கும் கொண்டு போகிறார். சந்தர்பங்களைப் பொறுத்து அவர் சாந்தமானவராகவோ அல்லது கோபமானவராகவோ காணப்படுகிறார். தந்த்ரமாக படிப்படியாக பழகுபவராகவோ அல்லது கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் பைத்தியக்காரன் போல நடந்து கொள்பவராக இருக்கக்கூடும். ஆனால் அந்த மகாத்மாவுக்கு மனதில் அளவற்ற பொறுமையுண்டு தன்னை சரணைடைந்த சீடனை எத்தனைமுறை வேண்டுமானாலும் சாதகமுறைகளை மாற்றிப் பார்க்க பொறுமைகொண்டவராக இருக்கிறார். இந்த இரண்டாம் படி நிலையில் குருவின் மீது சீடன் கொண்ட பக்தியும் சீடன் மீது குரு கொண்டுள்ள பாசமும் அக்கறையும் உறுதிப்படுத்தப்படுகிறது. மனிதன் ஒரு உடல் மட்டுமல்ல அவனுக்குள் ஆத்மாவும் நிலைகொண்டிருக்கிறது. அவன் கை கால் விரல் நகங்களைப் பாருங்கள் எத்தனை கடினமானதாக இருக்கிறது ஆனால் அவன் இதயம் எத்தனை மென்மையானது எத்தனை வகை உணர்சிகள் கொண்டு கொந்தளிக்கிறது! அவனது தலை தேங்காய் சிரட்டைபோல கடினமானது ஆனால் அவற்றிலிருந்து கவிதை ஊறிவருகிறது. இப்படி பலவகை குணங்கள் கொண்ட உறுப்புகள் நம் உடலில் உள்ளது. ஒரு மருத்துவ நிபுணர் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் படித்து விளக்குவதுபோல ஒரு குரு உடலையும் உயிரையும் இணைக்கும் பிரதானமானவற்றை அறிமுகப்படுத்தி வைக்கிறார். உடலிலிருந்து மனதிற்கும் மனதிலிருந்து உடலுக்கும் தொடர்புறுத்தும் சில தொடர்புகளை சுட்டிக் காண்பித்து அதனை சீடனுக்கு அறிமுகப்படுத்துகிறார். அதற்காக குரு வடிவம் மற்றும் மொழிசார்ந்த கருவிகளைப் பயன்படுத்துகிறார். எண்கணிதம் வடிவகணிதம் ஆகிய இரண்டும் இக்கல்வியில் ஒன்றிணைகிறது. வடிவ கணிதத்தின் முதல் மூல வடிவங்களான சதுரம்,வட்டம், முக்கோணம், புள்ளிகள் போன்றவை முக்கிய கருவிகளாக இருக்கிறது. அவற்றிலிருந்துதான் மந்திரங்கள் துவக்கப்படுகிறது. மந்திர உச்சாடனங்கள் மூலமாகவோ ஆதார சக்கரங்களின் மீது அமர்ந்து செய்யும் தியானங்கள் மூலமாகவோ தன்னில் உறங்கிக் கொண்டிருக்கும் சக்தியை தூண்ட முயலும்போது கிரியா யோகம் துவங்குகிறது. இத்தகைய கல்வியை நமக்களிப்பது தாந்த்ரீகமோ யோகமரபோ அல்லது வேதந்தமாகவோ இருக்கலாம் தாந்த்ரீக மார்கத்திலேயே வாம மார்கம் தட்சிண மார்கம் என இரண்டுண்டு. வஜ்ரோலி போன்ற அபாயகரமான சாதனை முதல் ஆஸ்ஸோசம் போன்ற விளையாட்டு முறை வரை தந்த்ர சாஸ்த்ரத்தில் இருக்கிறது. யோகிகள் உடல் செயல்பாடுகளை வேண்டியமட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் மனதை அடக்கும் மிதமான நோக்குக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் வேதந்திகள் தங்களுடைய உண்மை உருவமான பிரம்மத்திற்கு சாத்வீகமான வழியில் செல்லவேண்டும் என்பதற்காக தங்கள் சாதனை கூடுமானவரை ஞானமார்கமாக மற்றிக் கொள்கிறார்கள். மனிதர்கள் பலவகையான உடலின்பத்திற்கு ஆட்பட்டுக் கிடப்பதால் அவர்களை சிற்றின்பங்களிலிருந்து மனதுக்கும் மனதிலிருந்து ஆத்மாவிற்கும் கொண்டு செல்வதற்காக தந்த்ரம், யோகம் , வேதாந்தம் இம்மூன்றையும் இணைத்து சாதனையை உருவாக்கி கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு நல்ல மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் அறுவைச் சிகிச்சைக்குபின் அங்கிருக்கும் மற்றவர்களை அழைத்து நோய் என்னவாக இருந்ததென்றும் அதற்கு தீர்வாக நடத்திய சிகிச்சை என்னவென்றும் விளக்குவார். அது போல ஒரு குரு சொல்லும் மார்கத்தில் செல்லும் சீடனின் சாதனை தடைபட்டாலோ அல்லது முடிவிலோ சீடன் தன் அனுபவங்களை குருவிடம் பகிர்ந்து கொள்ளும்போது தொடர்ந்து என்ன செய்யவேண்டுமென குரு சொல்வதும் நிகழும். இதிலிருந்து காதில் ஒரு மந்திரத்தை ஓதிவிட்டு சென்றுவிடுவதல்ல தீட்சை என்பது புரியும். தீட்சை பயன்படுவது தனக்கு கிடைத்த தீட்சையை சீடன் சிரத்தையோடு நிறைவு செய்யும்போது மட்டுமாகும். ஆங்கிலத்தில் சொல்வது போல ( To take iniative ) என்பதுதான் அது. அதனைச் செய்வதற்கு குரு வழிகாட்ட முடியாது சீடன் சிரத்தையும் ஆர்வமும் கொண்டவணாக இருந்தால் வழி தானாகவே உருவாகி வரும் . அப்போது குரு சென்ற அளவைவிட தாண்டியும் செல்ல சீடனுக்கு முடியலாம். சிலமதங்களில் தீட்சையை ரகசியமான ஓரு கர்மமாக எண்ணிச் செய்கிறார்கள் பாரம்பரியமான அதே ஆசரவழக்கப்படி அவர்கள் தீட்சை கொடுத்து வருகிறார்கள் ஒரு மதம் தீட்சை வழங்கும் முறைக்கும் மற்றொரு மதம் தீட்சை வழங்கும் முறைக்கும் வேறுபாடு இருந்தாலும் எல்லா மதங்களும் ஒரே மாதிரியான பொதுக்கொள்கைகளைத்தான் கொண்டுள்ளன ( General principle). உதாரணமாக வாழ்கைக்கு ஓர் உயர்ந்த லட்சியம் இருக்கிறது என்ற நம்பிக்கையும். அந்த நம்பிக்கையைப் பின்பற்றி லட்சியத்தை அடைய வேண்டும் என்ற கொள்கையைச் சொல்லலாம். கவனத்துடன் சரியான வழியில் சென்று இலக்கை அடைய முன்பு ஒருவருக்கு இயன்றது என்றால் இன்றும் அது இயல்வதே என்ற நம்பிக்கை எல்லா மதத்திலுமுண்டு முழுமுதன்மையை அடையும் லட்சியம் மற்ற உலகியல் இலக்குகளைவிட உன்னதமானது எனவும் அதில் அழித்து விட முடியாத ஒரு நிறைவு இருக்கிறது எனவும் அதனை அனுபவிக்க முடியாதவர்கள் கூட நம்புகிறார்கள். உயரிய லட்சியத்தை அடைவது என்றால் முழுமுதன்மையை அடைவது எனப்பொருள். கண்ணாடியில் பற்றிப் பிடித்திருக்கும் அழுக்குபோல நம்மை பல தீமைகளும் குறைபாடுகளும் பற்றிப் பிடித்திருக்கிறது. அதனை நிவர்த்தி செய்ய முயலும்போதுதான் நாம் முழுமுதன்மையை நோக்கிச் செல்ல முடியும். நமது குறைகள் என்னென்ன அதை சரி செய்வதற்கான வழிகள் என்ன? அவற்றை எவ்வாறு துவங்குவது? ஒரு தூய்மையாக்குதல் ( சுத்திகரணம்) மூலம் நாம் அக்குறைகளை நிவர்த்தி செய்யத் துவங்கலாம். அதற்காகவே அனுபவசாலியான ஓர் ஆச்சார்யன் சீடனுக்கு தீட்சை வழங்குகிறார். பலரும் தீட்சையின் சரியான பொருளை புரிந்து கொள்ளாமல் அதனை வழக்கமான ஒரு சடங்காகப் பார்க்கிறார்கள். வேறு சிலர் அதனை சந்தேகத்திற்கிடமில்லாமல் உடலாலும் மனதாலும் அனுபவிக்கு முடிகிற ஒரு பொருளாகப் பார்க்கிறார்கள். உண்மையில் தீட்சை வாங்கும் முன்பே நாம் செல்லபோகும் வழியில் முன் சென்ற மகா குருக்களின் பாதையை அறிந்து அப்பாதையில் செல்ல நம்மை நாம் தயார் செய்துகொள்ள வேண்டும். நம்மிடமிருக்கும் அழுக்கு அல்லது குறைபாடு எது என கண்டறிந்து அதனை களைய முற்பட வேண்டும் , உடல் மனரீதியான சோர்வு, மறதி, கோபம், வெறுமை, பயத்தால் உருவாகும் கோழைத்தனம், உண்மையானவற்றைத் தேடிப் போவதிலுள்ள தயக்கம் இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக விளக்கி நம் கவனத்தையும் ஆர்வத்தையும் வலிமைப் படுத்த வேண்டும். ஆனால் பலருக்கும் கண்பார்வைக்கு அப்பால் புலனறிவை கடத்தி விடவோ சூட்சுமங்களைப் பார்க்கவோ இயல்வதில்லை. நம் முன் தடைகளிருக்கிறது இந்த தடைகளை நீக்காமல் நம்மால் முன்செல்ல முடியாது. மேலே சொல்லப்பட்ட உடல் ரீதியான மனரீதியான குறைபாடுகளை நீக்குவதற்கு தவம் இன்றியமையாததாகும். இதயம் நொறுங்குவது போலுல்ல வலி, இருளில் நடப்பது போன்ற, தனியனாய் இருப்பது போன்ற உணர்வு போன்றவை தவம் செய்யத் துவங்கும்போது நேருகிற முதல் அனுபவங்கள் ஆகும். தன்னை சுத்திகரித்துக்கொள்ள தவம் மேற்கொள்ளத் துவங்கும் சாதகன் ஒருவனுக்கு இந்த உலகம் முழுவதும் எதிராக இருப்பது போலவும் கசப்பு நிரம்பியிருப்பது போலவும் தோன்றும். ஒரு இரும்புச் சுரங்கத்திற்குள் நுழைந்து அதன் வழி முழுவதையும் கடந்து மறுபுறம் அடைந்த பின்னரே வெளிச்சம் வரும் . எவ்வளவு மகத்தான குருவாக இருந்தாலும் எங்கு செல்லவேண்டும், எப்படிச் செல்லவேண்டும் எனச் சொல்லித் தருவார்களே தவிர சீடனைத் தோளில் தூக்கிக் கொண்டு சென்று மறுவசம் சேர்க்க மாட்டார்கள் தீட்சை பெற்ற சீடனின் திறமே அவனது சக்தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்வு (சிறுகதை)

அஞ்சலை நாவல் ஒரு பதிவு

கோட்டையை திறப்பதற்கான சாவி- வாசிப்பது எப்படி நூல் வாசிப்பனுபவம்