மழைப்பயணம்

மழைப்பயணம்

பிறந்து வளர்ந்ததெல்லாம் மலைப்பகுதியில் மழையினூடேதான் என்றாலும் மழையை ரசிக்கும் கண்களை இலக்கியம் தான் கொடுத்தது(மழையை மட்டுமல்ல உலகையும்). மழையை வெறுப்பவனுக்கு மழைபோல் கொடிது வேறெதுவுமில்லை. மழையை நேசிப்பவனுக்கு மழையில் அலைந்து திரிவது ஒரு பேரானந்தம்……. மழை ஓர் ஒப்பனைக்காரி இவ்வுலகின் அழுக்கை சுத்தம் செய்து ஒப்னையிட்டுச் செல்கிறாள்…….. இவ்வுலகின்மீது இயற்கை காட்டும் ஒட்டுமொத்த கருணை மழை ……

தாமரைகண்ணன் பயணத்திற்காக அழைத்த போது வருகிறேன் என்று சொன்னாலும் எல்லாம் சரியாக நடந்துவிடுமா? என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. நிறைய பயணங்கள் முடிவு செய்து கடைசி நிமிடம் கைவிடப்பட்டிருக்கிறது. ஒரு வித நம்பிக்கையின்மையோடுதான்  நாகையிலிருந்து .திருச்சிக்கு ரயில் ஏறினேன்.  பயணம் முடிவு செய்துவிட்டால் பயணத்திற்கு முந்தையதினம் இருந்தே  மனமும் உடலும் ஓரிடத்தில் அமர இருப்பு கொள்ளாது.. ஏதாவது வேலைசெய்து கொண்டோ தீவீரமாக படித்துக் கொண்டோ இருக்க வேண்டும் அப்படியிருந்தாலும்  பயணத்திற்கான ஆவல் குளத்தில் விழுந்த கல்போல மனதை அழுத்திக்கொண்டிருக்கும்.



திருச்சியில் இறங்கி மைசூருக்கு ரயில் ஏறியபின்புதான் பயணம் செல்வதை உறுதி செய்து  கொண்டேன். இலக்கிய கூட்டங்களில் மட்டுமே செல்வராணி அக்காவை பார்த்திருக்கிறேன்.  அவரின் தனியான  இந்திய பயணத்தை பார்த்து  வியந்திருந்தேன் எளிமையாக பழகுவதற்கு எளிமையாக  இருந்தார்..ரயிலில் வேலையைப் பற்றி துவங்கிய பேச்சு மெல்ல   இலக்கியம் வரை நீண்டது  பின்  விரைவாக தூங்கிவிட்டோம்.

காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிட்டேன். பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் போது unreserved கம்பார்மெண்டிலிருந்த நிறைய பேர் உள்ளே ஏறினார்கள் .இவ்வுடனடி ஆக்ரமிப்பை சற்றும் எதிர்பாராதவனாய் அருகில் வந்தமர்ந்த சிவந்த குண்டு அண்ணணிடம். இது reserved கம்பார்ட்மெண்ட் என்றேன். அவர் ரிசர்வேசன் எல்லாம் நைட்தான் .பகலிலெல்லாம் அது இல்லை என்றார் கன்னட தமிழில்….. ரயில்வே எப்போது இந்த புதிய விதியை கொண்டுவந்ததென்று தெரியவில்லை. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் இப்படி reserved கம்பார்ட்மெண்டில் உட்கார்ந்ததற்காக டிக்கட் பரிசோதகர்களாலும்,பயணிகளாலும்,போலிஸ்காரர்களாலும் பல முறை விரட்டப்பட்டிருக்கிறேன். கேரளாவில் ஊனமுற்றவர்கள் பெட்டியில் அமர்ந்ததற்காக ஒரு போலிஸ்காரர் இறங்கடா பட்டி என்றார்…..

ஆந்திர போலிஸ்காரர்களை பெருமையாக நினைத்தாலும் reserve செய்த சீட்டில் ஒடுக்கி உட்கார்ந்து கொண்டு வந்ததும்… ,ஒருவர் அதிகாரமாக நகர்ந்து உட்கார் என்று சொன்னதும்,,கொஞ்சம் வயிற்றை எரியத்தான் செய்யவைத்தது…

மைசூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கி நூற்றூக்கணக்கான ஜனங்களுடன்  ரயில் நிலையத்தை விட்டு வெளியேற முண்டிக்கொண்டிருக்கையில் .மழை பெரும் இரைச்சலோடு எங்களை  வரவேற்றது. ரயில்நிலையத்திலே தயாராகிக் கொண்டு ஆட்டோவில் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்டோம். கருடா மாலை காணமுடியாமல் சின்ன தவிப்பு தாமரைக்கு போன் செய்தபோது அருகில் இருக்கும் பேக்கரி பக்கம் நிற்குமாறும் தன் தங்கை அங்கு நிற்பதாகச் சொன்னார்….. .கீழே பேக்கரி  படியின் வாசலில்  ஒரு பெண் சோகமாக உட்கார்ந்திருந்தார். நீங்கள் தானே தாமரை சிஸ்டர் என்றேன் .
எப்படித்தெரியும்?
சேம் கண்ணாடி எனச்சொல்ல நினைத்தேன் பின் ஏனோ சொல்லாமல் புன்னகைத்தேன்..

பின்னர் திரும்பி நடந்தபோது தாமரையும் விஸால் ராஜவும் மழையில் நனைந்து கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஏற்கனவே மழைப்பயணம் துவங்கிவிட்டிருந்தது  விசாலையும் இதுவரை இலக்கிய கூட்டங்களில் மட்டுமே சந்தித்திருக்கிறேன். .இன்னும் ஒரு பத்து வர்சத்துல writer ஆகிடுவீங்க விசால் என்றேன். அவர் உடனே ஏன் அப்ப இப்ப ரைட்டர் இல்லயா? என்றார். ஆரம்ப்பத்திலே முட்டிக்கொண்டதோ? இல்ல எஸ்டாபிலிஸ்ட் ரைட்டர் ஆகிடுவீங்க என்று சொல்லி சாமாளித்தேன்.வண்டியை செல்வராணி அக்கா  ஓட்டினார். வண்டி எதோ கியர் பிராப்ளம் .பயணம் முடிவு வரை திகிலோடுதான் இருந்தோம்...

காரில் பயணம் போகிறேன் என்பதை நினைக்கையில்  ஆச்சரியமாக இருந்தது. சிறுவயதில் பொம்மைக் காரில் மழைக்காலங்களில் டயர் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது போல் வேகமா ஓட்டிக்கொண்டு போவதும். படக்கதைகளில் வரும் சாகசக்காரை  மனதில் நானே ஓட்டுவதாக கற்பனை   செய்வதும் சாலையில் எப்போதாவது பவனி வரும் காரை  வியப்போடு பார்த்து கைகாட்டுவதும் .சிலர் மூடியிருக்கும் கண்ணாடியை திறந்து திருப்பி கைகாட்டுவதையும்  நினைத்துக் கொண்டேன் ஆனால் அந்த சுவாரசியம்  இன்று காரில்  பயணிக்கும் போது இல்லை இன்று சிறுவர்கள் யாரும் காரைப்பார்த்து கைகாட்டுவது இல்லை என்று நினைத்துக் கொண்டேன்...

விசால் அமைதியானவராக இருந்தார். அவ்வப்போது கேட்ட்கும் கேள்விகளுக்கு மட்டும்   மட்டும் சுருக்கமாக தெளிவாக   பதில் சொல்வது. மற்ற நேரங்களில் அமைதி   (ஒரு எழுத்தாளருக்கான குணங்களோ)  ……

வண்டியில் கோளாறு இருந்தும் அதையே எடுத்துக் கொண்டு போவதாக முடிவுசெய்தோம் .முதலில் கோமத்கிரி என்ற சிற்றூரில் உள்ள   ஒரு கசமணர் கோயில் ஒரு சிறு குன்றின் மேல் சுற்றிலும் யூக்லிப்படஸ் மரம் சூழ இருந்தது. ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்ட கோயில். ஏறுவதற்காக பாறைகளில் கற்படிக்கட்டுகள் வெட்டப்பட்டிருந்தது சமண முனிவர்களின்  பாதங்கள் கிரனைட் கல்லில் செதுக்கப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது. கோவிலின் உள்ளே  ஒற்றைக்கல்லால் செதுக்கப்பட்ட பாகுபலி சிலை இருந்தது. ஆடு மேய்ப்பவர்கள் தான் அப்பகுதியில்  நடமாடிக்கொண்டிருந்தார்கள் .  ,கூடவே இரண்டு காதல் ஜோடிகள் (சமணகோயிலுக்கு பாகுபலியை தரிசிக்க வந்தனர் என்பதை இதைப்படிப்பவர்கள் நம்பவேண்டும்!)

அதை முடித்தவுடன் அடுத்தபடியாக அருகில் இருந்த திபெத்திலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்த திபெத்தினருக்காக ஒதுக்கப்பட்ட இடம்  (TIBETIAN SETTLEMENT PLACE )ற்கு சென்றோம் .ஒரு பேண்டசி உலகத்திற்குள் நுழைந்தது  போல் இருந்தது. முற்றிலும் எங்கும் சிவப்பு கலர் துணி போர்த்திய புத்த பிட்சுக்களும். திபெத்தியருமே இருந்தனர். திபெத்திற்கே சென்றுவிட்டது போன்ற உணர்வு, தங்க முலம் பூசப்பட புத்த சிற்பங்கள். ஆபரணங்கள். சுவர் சித்திரங்கள் என அந்த இடமே விழாக்கோல மனநிலையை அளித்தது.

திபெத்தியர்களால் கர்னாடகத்தின் ஒரு சிறு பகுதிக்குள் தங்களது நாட்டின் பண்பாட்டையும், மொழியையும் ,உணவையும் கலாசாரத்தையும் கொண்டுவர முடிந்திருக்கிறது

 இன்று கனடா, பிரான்ஸ்,  ஐரோப்பா,  என சிதறிகிடக்கும் இலங்கை தமிழரை நினைத்துக் கொண்டேன். தங்களது மொழி கலாசார உணர்வுகளையும் இழந்து வேறொரு நாட்டில், வேறொரு அடையாளத்துடன் ,வேறோரு   மொழி பேசிக்கொண்டு  புதுவிதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் நினைவுகளில் மட்டும் சொந்த ஊரை தேக்கி வைத்துக் கொண்டு……….  

நண்பர்கள் திபெத் உணவு சாப்பிட்டார்கள். கொழுக்கட்டை போல வெள்ளைமாவில் மாட்டுக்கறி வேகவைத்து. அதன் பெயர் மோசா என்றார்கள் .பின்னர் மோசாவை நீரில் இட்டுசெய்த சூப்.என்னால் வித்யாசமான ( ஏன் சாதரணமான இறைச்சியைக் கூட ஒவ்வாமையோடு தான் சாப்பிட வேண்டியிருக்கிறது.) இறைச்சி உணவை சாப்பிட முடியவில்லை பயணங்களின் போது நினைத்த உணவை சாப்பிட முடியாது, எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டேன்..

அங்கிருந்து  கொட்டி தீர்க்கும் மழையில், கோளாறான வண்டியோடு மடிகிரி சென்ற  போது இரவு மணி ஏழு. தழைகாவிரி என்று அழைக்கப்படும் காவிரியின் முகப்பைக் காண  பெரும் மழையால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்கள். ஆகவே மடிகிரியில் தங்கி காலையில் கிழே திரும்புவதாக ஏற்பாடு. 2200 ரூபாய்க்கு இரு அறைகள். ஒரு வழியாக பேரம் பேசி பொதியை எடுத்துக் கொண்டு அறைகளில் வந்து படுத்தபோது அப்பா என்றிருந்தது.


விசால்ராஜா ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்றார்.  மழையில் நனைந்து கொண்டு ஐஸ்கிரீம் வாங்கப் போனோம். திரும்பி அறைக்கு வரும்போதே இலக்கிய விசாரம் துவங்கிவிட்டது. ஒன்பது மணிக்கு  இயல்புவாதம் எதார்த்த வாதம் என ஆரம்பித்த பேச்சை இரவு பதினோரு மணிக்கு   பின்னர் தத்துவவிசாராமாகி  ஓம் சத் சத் கூறி நிறைவு செய்தோம்.

 காலையில் முதல் ஆளாக எழுந்து விட்டேன் எழுந்தவுடன் பாடத்துவங்கி விட்டேன். தாமரை பாட்டின் பொறுமை தாங்காமல் எழுந்து விட்டார். விசாலுக்கு பொறுமை அதிகம் தான் . காலையில் தழைக்காவிரி போகமுடியாததால் வேறொரு இடத்திற்கு  படகு பயணம், யானை சவாரி  செய்ய தீர்மானித்தோம் .அங்கு சென்ற பின்புதான் தெரிந்தது. இரவு கொட்டிய பெரும் மழையால் ஆற்றில் வெள்ளம் புரண்டு ஓடிக்கொண்டிருந்தது பெருமரங்கள் ஒடிந்தும் ஆற்றில் இழுத்து விடப்பட்டும் கிடந்தது.  முதல் நாளே
 உக்கிரம் கொண்ட மழையின் வீரியம்   மழைநின்ற பின்பு தான் தெரிந்தது. அடர் மஞ்சள் நிறத்தில் பெருகி ஓடும் நீரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மழையைப் போல் நதியைப் பார்க்கவும் சலிப்பதில்லை ,மழையின் வேறு வடிவங்கள் தானே, நதி, அருவி, ஆறு,குளம், கடல் எல்லாம்…

பின்னர் வீடு திரும்ப மைசூருக்கு திரும்பினோம்.வழியில் இடுக்கியைப்போல காப்பி தோட்டமும். மிளகுத்தோட்டமும் தான். ஒரு கணம் வீட்டிற்கு போவதாய் உணர்ந்தேன். ஒல்லியான பெரும் வளர்ந்த மரங்களை சுற்றி படர்ந்திருக்கும் மிளகுக் கொடி. சிறு மரங்களில் பச்சை முத்துக்கள் போன்ற காப்பிக்கொட்டைகள். அறநூறு கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் இரு இரட்டை நிலங்கள் என்று இடுக்கியையும்  நினைத்துக் கொண்டேன். மழைப்பயணம் நிறைவுறத்தொடங்கிய போது  மழையும் நிறைவடைந்தது. 
மைசூருக்கு அருகில் வரும் போது உடல் சூடாகியிருந்தது.

 வரும் வழியில் ஒரு வனப்பாதையில் இருந்த ஒரு கோயிலில் இரங்கி கொஞ்சம் ஓய்வெடுத்தோம் .அக்கோயிலைச் சுற்றி குரங்குகள் நிறைந்திருந்தன. அம்மாவை அழைத்துக் கொண்டுவந்திருந்தால் அனுமாருச்சாமி என கும்பிட்டு ஏதாவது திண்பண்டங்கள் எடுத்து  குரங்கிற்கு தின்ன கொடுத்திருப்பாள்…..

மைசூர் வந்திறங்கி காரை ஒப்படைத்துவிட்டு நல்ல ஓட்டல் தேடும் படலம். சமீரா ஓட்டலில் புல் கட்டு. உட்காருவதற்கு இடம் இல்லாததால் தாமரை எங்களது தட்டில் சேர்ந்து சாப்பிட்டார் .பின் பேருந்து நிலையம் வந்திரங்கியதும் மனம் ஏனோ துக்கத்தில் உழண்டது ..பள்ளி செல்லும் குழந்தை வீட்டில் இருக்க அடம் பிடிப்பதைப் போல.. மைசூரிலே இருந்து விட மனம் துடித்தது. ஒவ்வொரு முறையும் பயணம் முடிந்து வீட்டிற்கு திரும்ப ஏதோ காரணம் வேண்டியிருக்கிறது. இம்முறை செல்வராணி அக்கா திருச்சிக்கும் தஞ்சாவுருக்கும் டிக்கட் எடுத்து விட்டார் சரி இனி ஊர் போய்விடுவது என முடிவு செய்தேன்.

பேருந்து நிலையத்தில்  பெண்களுக்கான தனி அறையில் உட்கார்ந்து கொண்ட செல்வராணி அக்கா எங்கயும் போயிராதா .இங்கியே எங்காவது உட்காரு என்றார்.அம்மா எங்காவது விட்டுச் செல்லும் போது சூதானமா ஒக்காந்துக்கடா  வந்துர்ரேன் …..எங்கயும் போககூடது என்று சொல்வது ஞாபகம் வந்தது. மனம் ஓரிடத்தில் உட்கார மறுத்தது தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக சொல்லி நேராக மைசூர் பேலஸ் நோக்கி நடந்தேன் .இவர் பெரிய மைசூர் மகாராஜா….. சும்மாவா சொனார்கள். இரு கண்களுக்குள்  அடங்க மறுத்த கட்டிடம் . உள்ளே ஜனக்கூட்டட்ம் ஊர்வது தெரிந்தது. ஓரளவிற்கு மேல் உள்ளே செல்ல காவலர்கள் அனுமதிக்க வில்லை .எதிர்புறம் இருந்த மலைமேல் கோட்டை ஒன்று இருந்தது .அடுத்த முறை வரும் போது அங்கு போகவேண்டும் என நினைத்துக் கொண்டேன். பக்கத்தில் எதும் நூலகக் கட்டிடம் இருக்கிறதா எனத் தேடினேன். ஏதும் இருப்பதாக தெரியவில்லை. மைசூரில் தமிழ் பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

காலம் கடந்து பிரமாண்டமாக நிற்கும் அரண்மனை அதன் சுற்றுச்சுவர்.  லயத்தில் நின்றிருந்த யானைகள், ஆட்டோக்கள் பேருந்துகளில் ஊடே ஓடூம் குதிரை வண்டிகள்..என மைசூர் நவீனமும் வரலாறும் கலந்து கிடக்கும் நகரம் எனத்தோன்றியது. பின் தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு   பஸ்நிலையம் திரும்பினேன்  செல்வராணி அக்கா தீவிரமாக படித்துக் கொண்டிருந்தார். எங்க போன என்று கேட்கவில்லை. கேட்டிருந்தால் பொய்தான் சொல்லியிருக்க வேண்டும் .பேருந்தில் முதல் இருக்கை ,கால் நீட்ட சிரமமாக இருந்தது .நடத்துனரிடம் கேட்டு பின்னால் வந்து படுத்து கண்களை மூடிக்கொண்டேன்  மனதிற்குள் மழை பொழிந்து கொண்டிருந்தது…………………………………


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை புதிய சிலுவை

தேர்வு (சிறுகதை)

கோட்டையை திறப்பதற்கான சாவி- வாசிப்பது எப்படி நூல் வாசிப்பனுபவம்